தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பிய “யாருடா அந்த பையன்” என்ற விளம்பர பதாகைகளுக்கு பதில் கூறும் விதமாக, மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் “நான் தான் அந்த பையன்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கலால் துறை மற்றும் கல்லூரி கல்வித் துறையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், போதை பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, “போதை பொருளை தொட மாட்டேன், போதை பொருளை தொட அனுமதிக்க மாட்டேன்” என்ற வாசகத்துடன் புதிய பதாகைகள் வெளியிடப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், போதை இல்லா புத்தாண்டை வரவேற்கும் நோக்கில், இந்த பிரச்சாரத்தை தொடங்கியதுடன், கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சமூகத்திற்கு தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.இந்த நடவடிக்கை, போதைப் பொருள்களுக்கு எதிரான அரசின் திடமான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.