புதுச்சேரியில் அமலுக்கு வந்துள்ள மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட பின், வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான மின்கட்டணத்தை உயர்த்தி, கடந்த ஜூன் மாதத்தில் அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை அமல்படுத்தவில்லை. அதனால், கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என மின்துறை அறிவித்தது.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், சோனாம்பாளையம் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நுழைவாயில் கேட் பூட்டப்பட்டதால், சிலர் கேட் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிமுகவினர் அமைதியாக கலைந்து சென்றனர்.
மேலும், மின்கட்டண உயர்வை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் சமூக அமைப்பினர் மின்துறை தலைவர் சன்முகத்தை சந்தித்து, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்து, கட்டண உயர்வை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்தனர்.