திருபுவனை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலித்தீர்த்தால்குப்பம் வி.கே நகரைச் சேர்ந்த ரகு என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருடுபோனதாக திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மதகடிப்பட்டு மேம்பாலம் அருகே வாகன சோதனையின் போது, குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஒருவர் பிடிக்கப்பட்டார். விசாரணையில் அவர் ஓட்டி வந்தது திருடிய மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. மேலும், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (49) என அடையாளம் காணப்பட்டார்.
வெங்கடேசன் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய வாகனங்களை கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கல் அஜித் (27) என்பவரிடம் விற்றதாகவும் தெரியவந்தது. அஜித்தை கைது செய்த போலீசார், அவரது வசமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வெங்கடேசன் மற்றும் அஜித் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வெங்கடேசன் மீது ஏற்கனவே 15 மோட்டார் சைக்கிள் திருடிய வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.