கோவை மாநகர போக்குவரத்து காவல் நிலையத்தின் ஏற்பாட்டில் வடவள்ளி பகுதியில் சாலை விழிப்புணர்வு முகாம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜாமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், இரவு நேரங்களில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் மது அருந்தி வாகன ஓட்டம் செய்யும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டிய நபர்களை காவல்துறையினர் பிடித்து, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவர்களை இரண்டு முதல் மூன்று மணி நேரம் காவல்நிலையத்தில் வைத்திருந்து அறிவுரை வழங்கியதுடன், 2025 புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கோவை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜாமணி இதுகுறித்து கூறியதாவது:
“வழக்கமான போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள், குறிப்பாக மது அருந்தி வாகனம் ஓட்டுவோர், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள். அவர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்கி, அவர்களின் சொந்தக்காரர்கள் வருகை தந்த பிறகே அனுப்பி வைக்கின்றோம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.”
இந்த விழிப்புணர்வு முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.