சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், இந்தியாவின் தற்போதைய ஜிஎஸ்டி விதிமுறைகளை விமர்சித்தார். “உப்பு போட்ட பொருளுக்கு ஒருவரி, உப்பு போடாத பொருளுக்கு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி இந்தியாவில்தான் உள்ளது” என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்தியாவுக்கு பெரிய இழப்பாகும் என தெரிவித்த அவர், “மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் 20 கோடி மத்திய வர்க்கத்திற்கும் 24-27 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே வருவதற்கும் காரணமாக இருந்தன” என்று பாராட்டினார்.
பாமக கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, “உள் ஒதுக்கீடு முறையான கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார். மேலும், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவது பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2026 தேர்தலுக்கு திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைப்பது உறுதி என நம்பிக்கை தெரிவித்த அவர், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கின்றன” என்றும் கூறினார்.