சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை 14 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (அக்.29) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் இருமார்க்கமாகவும் தலா 45 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மூன்று பாதைகளில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் இரண்டு பாதையில் புறநகர் ரயில்கள், மற்றொரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயங்கின. அதற்காக 4-வது பாதை அமைக்க ரூ.274.20 கோடி மதிப்பில் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது.
இந்த பணிகளின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பணி தாமதத்திற்கான காரணமாக கடற்படை அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறிப்பிடப்பட்டது. அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது சேவைகள் தொடங்குவதற்கான நிலை வந்துள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, “தற்போது 10 ரயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படும். சேவை பணிகள் நிறைவடைந்ததும் 120 சேவைகள் வழக்கமாக இயங்கும்,” என்றனர்.