கோவை: காளப்பட்டி சந்திரமாரி சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியை முன்னாள் ராணுவ அதிகாரி மோகன்தாஸ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி தாளாளர் டாக்டர் சுமதி முரளி குமார் தலைமை தாங்கினார், மற்றும் முதல்வர் விஷால் பந்தாரி வரவேற்றார்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இக்கண்காட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு இப்படியான வாய்ப்புகள் பள்ளி அளித்து வருவதாகவும், அறிவியல் பூர்வமான மற்றும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என தாளாளர் டாக்டர் சுமதி முரளி குமார் தெரிவித்தார்.
முன்னாள் ராணுவ அதிகாரி மோகன்தாஸ் பேசும்போது, இளம் பருவ மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகக் கிடைக்கின்றன. இவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி எனக் குறிப்பிட்டார்.
கண்காட்சியில் பார்வையற்றோர்களுக்காக சிப் வசதி மற்றும் சென்சார் வடிவமைப்புடன் கூடிய கண்ணாடி மற்றும் கைத்தடி, தானியங்கி மேம்பாலங்கள், தண்ணீர் மறுசுழற்சி முறைகள் போன்ற பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர்கள் கௌதம் சந்துரு, டாக்டர் விஜய் சந்துரு, ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.