நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமான “வேட்டையன்” இன்று திருச்சியில் வெளியானது. இயக்குனர் ஞானவேல் இயக்கிய இப்படம், ரஜினிகாந்தின் சமீபத்திய வெற்றிப் படம் “ஜெயிலர்” படத்தைத் தொடர்ந்து வந்துள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.
இந்த படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார், இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கியமான கதாபாத்திரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் திரையுலகில் நடித்துள்ளார். படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் துசாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று திருச்சியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் “வேட்டையன்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் பெருமளவில் வந்தனர். திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றத்தின் துணை தலைவர் சுதர்சன் மற்றும் மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில், ரசிகர்கள் ரஜினியின் போஸ்டருக்கு ஒரு டன் மலர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூவி, வெடிகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ரஜினிகாந்த் உடல் நலமாக நீண்ட நாள் வாழவேண்டும் என பிரார்த்தித்தனர்.