புதுச்சேரி வம்பாக்கீர பாளையம் மீனவ கிராமம் அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உரிமையிலான பாண்டி மெரினா பொழுதுபோக்கு மையத்தை விரிவுபடுத்துவதற்கு, மீனவ பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க முயல்வதை எதிர்த்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் சுமார் 3 மணி நேரம் நீடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
வம்பாக்கீர பாளையம் கடற்கரை பகுதியில், தனியார் நிறுவனத்தின் சார்பில் பாண்டி மெரினா என்ற பெயரில் உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த மையத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான அரசின் அனுமதி கிடைத்த நிலையில், மீனவ கிராம மக்களுக்குச் சொந்தமான இடங்களையும் ஆக்கிரமிக்கக் கூடும் என மீனவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால், மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் வலைகளை வைக்க இடமின்றி சிரமப்படுகின்றனர். மேலும், தனியார் நிறுவனத்தின் படகு சவாரி சேவைகள் மீனவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் சோனம்பாளையம் 4-முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரமாக நீடித்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சிலருடன், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களுக்கு மோதல் ஏற்பட்டது. போலீசார் உடனடியாக இளைஞர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீன்பிடி துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேசினார். துணை மாவட்ட ஆட்சியர் சமாதான பேச்சு நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் தற்காலிகமாக மறியலில் இருந்து கலைந்தனர்.