புதுச்சேரியில் ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.25 என இருந்த கட்டணம் ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. மின்துறையின் வரவு செலவு கணக்குகள் இணை ஒழுங்கு மின்சார ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களுடன் ஆலோசித்து கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது.
அதன்படி,
- முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.2.25 இருந்தது, தற்போது ரூ.2.70 ஆக உயர்ந்துள்ளது.
- 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 இருந்தது, ரூ.4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 இருந்து ரூ.6 ஆக உயர்ந்துள்ளது.
- 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணம் ரூ.6.80 இருந்தது, ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 65 பைசா முதல் 85 பைசா வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி அரசு, இந்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்தது. எனினும், இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் அதனை ஏற்க மறுத்ததால், ஜூன் 16ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, உயர்த்தப்பட்ட மின்கட்டணம் வசூலிக்கப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.