தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருந்தது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக இருந்தனர். அவற்றில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள். வாக்குப்பதிவு முடிந்து சுமார் 45 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளதால், தமிழகம் முழுவதும் அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அடுத்த 2 நாட்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவசரகால செயல்பாடுகளை கையாள ஆபரேட்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.