திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இடைவிடாமல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
விமான புறப்படுவதற்கு முன்பாக, பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வு அறைக்கு அழைத்துவரப்பட்டனர்.
விமானத்தை சரி செய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். ஆனால் உதிரி பாகங்கள் இல்லாததால் சீரமைப்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் விமான நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர், மேலும் சிலர் தனியார் விடுதிகளிலும் தங்கும் ஏற்பாடுகளை பெற்றனர்.
விமானத்தை சரி செய்ய தேவையான உதிரி பாகங்கள் இன்று விமான நிறுவனத்தின் சார்பில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நேற்று இரவு புறப்பட வேண்டிய விமானம் இன்று இரவு கோலாலம்பூர் நோக்கி புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோளாறு காரணமாக அவதியடைந்த சில பயணிகள் விமான டிக்கெட் ரத்து செய்து சென்றதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.