திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட உயிா்காக்கும் உபகரணங்கள் பல தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதியுறும் நிலை உருவாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, வட்டார மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு, எலும் மூட்டு அறுவை சிகிச்சை, பல், தோல், பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை, பொது மருத்துவம், சிறுநீரக சுத்திகரிப்பு, காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட 16 சிறப்பு பிரிவுகள் உள்ளன. நாள்தோறும் 1,000 வெளிப்புற நோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிறந்த துணை மருத்துவமனையாகவும் இது செயல்படுகிறது.
பயன்படுத்தப்படாத மருத்துவ உபகரணங்கள்:
– 2018-ல் வாங்கப்பட்ட தானியங்கி பல்நோக்கு ரத்த பரிசோதனைக் கருவி
– 2015-ல் வாங்கப்பட்ட 12 அவசர சிகிச்சை படுக்கைகள் (மொத்தம் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ளவை)
– 2021-ல் வாங்கப்பட்ட 12 வெண்டிலேட்டா் கருவிகள் (மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ளவை)
– 2021-ல் வாங்கப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நடமாடும் எக்ஸ்-ரே கருவி.
“கோடிக்கணக்கான மதிப்புள்ள இக்கருவிகள் பயன்படுத்தப்படாமல் மருத்துவமனையின் சுவர்கள் ஓரமாக கிடப்பது வருத்தத்துக்குரியது. நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவையான நேரங்களில் கூட, விலை உயர்வான காரணங்களுக்காக சில கருவிகளின் செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.”
மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அருள்செல்வன் கூறுகையில், “மருத்துவமனையில் சில கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால், உபகரணங்களை வைக்க இடவசதி இல்லாமல் போயுள்ளது. கட்டடங்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தவுடன், அனைத்து உபகரணங்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், தானியங்கி பல்நோக்கு ரத்த பரிசோதனைக் கருவிக்கான ரசாயனம் வாங்குவதில் சிக்கல் நிலவுவதால், அதை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அரசிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பி. பரமசிவம், “இச்சிக்கல்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த உயிா்காக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது குறித்து பொதுமக்களும், நோயாளிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Leave a Reply