சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாரதான் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான புனித வனத்து அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 4 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் அந்தோணியார் சப்பர திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். மறுநாள் காலை, கரும்பு நேர்த்திகடன் செலுத்தப்படுவதுடன், விவசாயத்திற்கு செழிக்க பராம்பரிய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, ஜனவரி 17 அன்று மாலை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்கிராம மக்கள் புனித வனத்து அந்தோணியார் ஆலய முன்பு கிராம ஒற்றுமையை போற்றும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில், சப்பரத்தில் புனித வனத்து அந்தோணியார் மற்றும் பாத்திமா மாதா தனி தனி சப்பரங்களில் எழுந்தருளி திருவீதி உலாவினர்.
மாலை நேரத்தில், பொறி உள்ளிட்ட பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பிறகு, முக்கியமான நிகழ்வு கரும்பு தொட்டில் கட்டி நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது. அதன்பின், புனித வனத்து அந்தோணியாருக்கு கொடுக்கப்பட்ட கரும்பு மற்றும் பிற பொருட்கள் ஆலய வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில், முதல் கரும்பு ரூ. 50,100 க்கு, பாடத்தான் பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோனி என்பவருக்கு, மூன்றாவது கரும்பு ரூ. 26,000 க்கு இராஜசேகர் என்பவருக்கு ஏலம் கிடைத்தது. கிராமவாசிகள் கூறுவதாவது, கரும்பு ஏலத்தை வாங்கினால் அவர்கள் வாழ்கையில் ஆரோக்கியம் மற்றும் வெற்றி அடையும் என்பதால், இதில் மிகுந்த போட்டி காணப்படுகிறது.