சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மகளிர் உரிமை தொகை 52 குடும்ப பெண்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, காயங்குளம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா நகர் குட்டி தின்னி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாயக் கூலி தொழிலில் ஈடுபடும் இவர்கள், மகளிர் உரிமை தொகை வழங்கப்படாததை எதிர்த்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு வழங்கியிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இந்த நிலைமையில், சிவகங்கை மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்த கிராம மக்கள், அங்கு திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மானாமதுரை சிப்காட் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.