பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட விஜய்நகரில் வசிக்கும் மலர் மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார்.
மனுவில், “நாங்கள் உடுமலை ரோடு, சின்னம்பாளையம், விஜயநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். மேலும், ஓடுகளால் மூடிய இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்நிலையில், அருகில் உள்ள குடியிருப்பில் சுமார் 50 அடி உயரத்தில் ஒரு தென்னை மரம் உள்ளது. அந்த மரத்திலிருந்து விழும் தேங்காய் மற்றும் தென்னை மட்டைகள், ஓடுகளை சேதப்படுத்தி, வீட்டில் குடியிருப்பதற்குத் தகுந்த நிலையை இழக்க வைத்துள்ளன. இதனால், வாடகைக்கு இருந்தவர்கள் வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர், இதனால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மரத்தை வெட்டி அப்புறப்படுத்தக்கூறி, அருகில் உள்ள வீட்டு உரிமையாளரிடம் பல முறை கேட்டும் அவர் தகாத வார்த்தைகளில் பேசுகிறார். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் கூட நேரில் வந்து மரத்தை வெட்ட அறிவுறுத்தியும், வீட்டு உரிமையாளர் அதனை ஏற்கவில்லை.
எனவே, அச்சுறுத்தும் நிலையை ஏற்படுத்தும் அந்த தென்னை மரத்தை வெட்டி அகற்ற வேண்டுமென, எனது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply