திருச்சியில், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் சார்பில், தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலியின் தலைமையில் இந்த மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில், மனிதநேய மக்கள் நல சங்கத்தில் 300க்கும் மேற்பட்ட தரக்கடை வியாபாரிகள் உறுப்பினராக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் மலைக்கோட்டை பகுதியில் உள்ள NSP ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், தென்கரை, சத்திரம் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் வளைவு போன்ற இடங்களில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி மூலம் பனியன், ஜட்டி, சோப்பு, ஃபேன்சி பொருட்கள், ரெடிமேட் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில், பெரிய நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் தரைக்கடைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அப்புறப்படுத்தப்போகிறார்கள் என்ற செய்தி பத்திரிக்கைகளில் தொடர்ந்து வந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், அவர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சிங்காரத்தோப்பில் இருக்கும் யானை குளம் பகுதியில் தரக்கடை வியாபாரிகளுக்கு முழுமையாக கடைகளை ஒதுக்க வேண்டும் எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டனர்.
Leave a Reply