கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் கோயிலுக்குச் செல்கின்றனர். இந்தக் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கோயில் வளாகத்தில் போதிய வாகன நிறுத்த இடவசதி இல்லை.
முக்கிய விசேஷ நாட்களில் இந்து சமய அறநிலைத் துறை சார்பில், வாகன நெரிசல் காரணமாக நான்கு சக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கோயில் பேருந்துகளில் மட்டுமே பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இப்போது, இந்து சமய அறநிலைத் துறை மற்றும் அறங்காவலர் குழு ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டாயமாக ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 300 நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 வாகனங்களும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை 150 வாகனங்களும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பின் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இ-பாஸ் நடைமுறை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், பக்தர்கள் தங்கள் கருத்துகளை கோயில் அலுவலகத்திற்கு தபால் அல்லது இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்தார்.
அத்துடன், இருசக்கர வாகனங்கள், மலைப்படிகள் வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலமாக வருபவர்கள் சாமி தரிசனம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply