செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனைப் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரைவில் இரவுக் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டியுள்ளதாகவும், ரூ.1000 கோடி மதிப்பில் மேலும் 3500 வகுப்பறைகள் தேவைப்படும் இடங்களில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று, 3 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் இப்போது சேர்ந்துள்ளதாகவும், முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்க தேவையான இடங்களில் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து அரசு பள்ளிகளிலும் கூடுதலாக கழிவறைகள் அமைப்பதற்கான திட்டங்கள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply