சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளையும் மற்றும் வீட்டு தோட்டங்களில் வளர்க்கும் கொய்யா நெல்லி மா சப்போட்டா போன்ற பழங்களையும் தென்னை மரங்களில் காய்த்து குலுங்கும் தேங்காய்களையும் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தெருவில் விளையாடும் சிறுவர்களையும் அவ்வப்போது காயப்படுத்தியும் வருகிறது.
இதனால் கிராம மக்களுக்கு குரங்குகளின்
அட்டகாசம் ஒவ்வொரு நாளும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனையும் தனது ஒரே மகனையும் இழந்து இரண்டு பெண் பிள்ளைகளோடு மாடுகளினால் கிடைக்கும் வருவாயை கொண்டுவசித்து வந்த மாணிக்கவள்ளி வழக்கம்போல் மாட்டினை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வதற்கு சில மணித்துளிகள் முன்பாக தன் வீட்டிற்கு வரும் மின் இணைப்பு வயரில் உல்லாசமாக ஊஞ்சலாட்டம் போட்ட குரங்குகளின் விஷமதனத்தால் திடீரென வயர் அருந்து அருகே கட்டி கிடந்த மாட்டின் மேல் விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து வலி பொறுத்துக் கொள்ள முடியாமல் துடிதுடித்து அலறிய மாட்டின் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த மாணிக்கவள்ளி அவசரத்தில் மாட்டின் மேல் கிடந்த மின் வயரை அப்புறப்படுத்த முற்படும்போது எதிர்பாராதவிதமாக தன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
சில மணித்துளிகளிலேயே மாடும், மாணிக்கவள்ளியும் பலியான சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் இறந்த மாணிக்கவள்ளியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இச்சம்பவத்தின் துயரத்தில் இருந்து மீளாத கிராம மக்கள் கூறுகையில் இந்த குரங்குகளின் அட்டகாசத்தினால் இன்று எங்க கிராமத்தில் இரண்டு உயிர் பறிபோயி இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாக நிற்கிறது. மேலும் இதனால் நாங்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வீட்டை விட்டு வெளியே வரவே பெரும் அச்சத்தோடு இருந்து வருகிறோம். சில்லாம்பட்டி கிராமமாக இருந்த எங்கள் கிராமம் இன்று குரங்கு கிராமமாக மாறிப் போய் உள்ளது. வீட்டில் சாப்பிட வைத்திருக்கும் உணவை கூட இக்குரங்குகள் விட்டு வைக்கவில்லை. உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் ஊரை காலி பண்ணி செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை இன்று ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.