Friday, November 21

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்த சுமார் 229 பேர், கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைப் பானமாகக் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எதிர்கட்சிகள், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கள்ளச்சாராயம் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் ஆகியவற்றுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  தீபாவளி பயணத்திற்கான பேருந்து கட்டணத்தை கண்காணிக்கும் போக்குவரத்துத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *