கோவை, குனியமுத்தூர், வடவள்ளி பகுதிகளில் காரில் வந்து ஆடு திருடும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற காரில் அந்த கும்பல் இரண்டு வீடுகளில் பத்து ஆடுகளை திருடி சென்றது. மேலும் வடவள்ளி, திருமுருகன் நகரில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று ஆடுகள் திருடப்பட்டன. அதே போன்று காந்திநகர் அருகே நால்வர் நகரில் வசிக்கும் கண்ணன் என்பவர் வீட்டில் நான்கு ஆடுகளும், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்பவர் வீட்டின் முன்பு கட்டி இருந்த ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் ஆறு ஆடுகள் திருடு போனது. இது குறித்து அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் காரில் வந்து ஆடு திருடும் நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து ஆடுகளைத் திருடி கறிக்கடை நடத்தி வந்த கும்பலைச் சேர்ந்த வினோத்குமார், சதீஷ்குமார், சரவணன், சண்முகம், சாதிக் பாஷா மற்றும் சுகன்யா ஆகியோரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஆடுகளை திருடியது ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடிய 51 ஆடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.