கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய துறைக்கு சொந்தமான குடியிருப்புகளில், சுமார் 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளதால், முதியோர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதனால் நடவடிக்கை எடுக்க கோரி, மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து மனு அளித்தனர். குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
இந்த குடியிருப்புகளை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மனு அளிப்போர் தெரிவித்தனர். எனவே, பாதுகாப்பான மாற்று குடியிருப்புகளை கட்டித் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.