புகழ்பெற்ற அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், வரையாடுகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பு வருடம் தோறும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக அக்காமலை கிராஸ் ஹில், உலாந்தி மற்றும் கரியன் சோலா தேசிய பூங்காவில் செப்டம்பர் 3 முதல் 5 வரை ஊர்வன ஆய்வு (ஹெர்பெட்டோபவுனா) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வால்பாறை அருகே உள்ள 3122 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கிராஸ் ஹில் தேசிய பூங்கா, கடல் மட்டத்தில் இருந்து 6,600 அடி உயரத்தில் உள்ளது. அதேபோல், டாப்ஸ்லிப்பில் உள்ள கரியன் சோலா தேசிய பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 800 அடிக்கு மேல் அமைந்துள்ளது.
கிராஸ் ஹில் தேசிய பூங்காவில் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினரின் கணக்கெடுப்பில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அழிந்து வரும் பறக்கும் தவளை, டெக்கான் நைட் தவளை, நீரோடை டாரண்ட் தவளை மற்றும் புல் வெளியில் மட்டுமே வாழும் ரெஸ்ப்ளெண்டன்ட் தவளை உள்ளிட்ட அரிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1867ஆம் ஆண்டிற்கு பிறகு, இப்பகுதியில் 4 முறை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கோடுகள் கொண்ட அரிய வகை ஷீல்ட் டெயில் காணப்பட்டுள்ளது. மேலும், எலியட்ஸ் வனப்பல்லி, வால்ஸ் வைன் பாம்பு ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாப்ஸ்லிப்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நட்சத்திரக் கண்கள் கொண்ட காட் தவளை, அழிந்து வரும் பச்சை-கண் புஷ் தவளை, கொடைக்கானல் புஷ் தவளை, மஞ்சள் வயிற்று புஷ் தவளை, காலில்லாத ஆம்பிபியன் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட ஊதா தவளை ஆகியவை கண்டறியப்பட்டன.
இந்த கணக்கெடுப்பில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. விரிவான ஆராய்ச்சிகள் மூலம் இன்னும் பல புதிய உயிரினங்கள் மற்றும் அறிவியலுக்கு புதிய தகவல்கள் கிடைக்கலாம். இதன் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply