
கோவை: தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ், இன்று நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு தொழில்கள் பெருமளவில் உள்ளன. இதில் மூன்று வகையான தொழில்முனைவோர்கள் உள்ளனர். தற்போது மின்சார கட்டணம் நமது வாழ்வில் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தால் 460 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டணங்களை நாம் செலுத்த முடியாமல் போயுள்ளோம்.
மேலும், 18 கிலோவாட் மின் இணைப்பைப் பெற்ற தொழில்முனைவோர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல், பின் கட்டணமாக 50% முதல் 70% வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இதனால் தொழில்கள் முடங்கி வருகிறது. கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள், கைத் தொழில் மற்றும் குறு தொழில்முனைவோர்களிடமிருந்து தொழில் வரி மற்றும் ரன்னிங் லைசென்ஸ் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துள்ளனர். இது நமக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலைமைக்கு தீர்வு காண நகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களிடம் பாதுகாப்பு மற்றும் ஆதரவைக் கோருகிறோம். மேலும், வருகிற 21 ஆம் தேதி பெருந்திரள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட இருக்கிறது. இதில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்று, பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க உதவ வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு தபால் அனுப்பி, அவர்களின் ஆதரவை பெற்றுள்ளோம். இந்த பிரச்சனையை முறையாக பேசி, தொழில்முனைவோருக்கு உரிய பாதுகாப்பையும், வரி விதிப்பை முறையாகவும் நடைமுறையில் கொண்டு வரவேண்டும்” என்று, தலைவர் ஜேம்ஸ் கருத்து தெரிவித்தார்.