கோவை மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 17,155 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற்ற இந்த பணியின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்காக மொத்தம் 1,53,631 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய பரிசீலனைக்கு பின், இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்தி குமார் பாடி அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த இறுதி பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 31,85,594 ஆக உள்ளது. இதில், ஆண்கள் 15,58,678, பெண்கள் 16,26,259, மற்றும் இதர வாக்காளர்கள் 657 பேர் உள்ளனர். 18-19 வயது இளம் வாக்காளர்களில் 17,155 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர் விவரம் பின்வருமாறு: மேட்டுப்பாளையம் தொகுதியில் 3,11,891, சூலூரில் 3,34,311, கவுண்டம்பாளையத்தில் 4,91,143, கோவை வடக்கில் 3,45,934, தோண்டாமுத்தூரில் 3,42,928, கோவை தெற்கில் 2,44,863, சிங்காநல்லூரில் 3,36,841, கிணத்துக்கடவில் 3,49,815, பொள்ளாச்சியில் 2,29,086, மற்றும் வால்பாறையில் 1,98,781 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.