தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கைது நடவடிக்கையை கண்டித்து, கோவை சுந்தராபுரத்தில் த.வெ.க. கோவை தெற்கு மாவட்டத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை எதிர்த்து கல்லூரி மாணவிகளுக்கு எழுதிய கடிதத்தை, புஸ்ஸி ஆனந்த் நோட்டீஸாக வழங்கியதற்காக சென்னை போலீசார் அவரை கைது செய்ததை தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்டத் தலைவர் கோவை விக்னேஷின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மகளிரணி உள்ளிட்ட அணிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். புஸ்ஸி ஆனந்தை உடனடியாக விடுதலை செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில், காவல்துறையினர் சமாதானம் செய்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன், தொண்டரணி தலைவர் கிரிஷ், மாணவரணி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுந்தராபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டம், காவல்துறையின் தலையீட்டுடன் முடிவுக்கு வந்தது.