
கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாரின் மகள் பவித்ரா, மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்ற ஆறாவது தேசிய குவான் கிடோ சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார். சிந்தி வித்யாலாயா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் பவித்ரா, தமிழ்நாடு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி செமி கான்டக்ட், ஃபுல் கான்டக்ட் ஃபைட்டிங் மற்றும் வெப்பன் என மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் இந்தியாவின் 28 மாநிலங்களில் இருந்து தகுதி பெற்ற 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் பவித்ராவின் சாதனை குறிப்பிடத்தக்கது. கோவைக்கு திரும்பிய பவித்ராவுக்கு அவரது பயிற்சியாளர் பிராங்க்ளின் பென்னி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி வாழ்த்து தெரிவித்தனர். எளிமையான குடும்பத்தை சேர்ந்த பவித்ரா, அடுத்ததாக அர்மேனியாவில் நடைபெற உள்ள உலகளாவிய குவான் கிடோ போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.