
கோவையை சேர்ந்த கெளசிகா நீர்கரங்கள் கூட்டமைப்பு சார்பாக கோவையை சுற்றி பல நீர்நிலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் கோவை வடக்கு பகுதியின் வாழ்வாதாரமான சின்னவேடம்பட்டி ஏரி சீரமைப்பு பணிகள் மற்றும் தொடர் பராமரிப்பு பணிகள் உட்பட பசுமை பணிகள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களுக்காக பறவைகள் நடைகானல், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் போன்ற பணிகள் கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
இதில் 342 வது வார களப்பணி தினத்தில் இன்று சிறுவர் சிறுமியர்களுக்கும் பசுமை சூழலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை கணபதி கே2 ஸ்டூடியோ உடன் இணைந்து பசுமை தீபாவளி என்ற தலைப்பில் ஓவிய போட்டி சின்னவேடம்பட்டி ஏரிப்பகுதியில் நடைபெற்றது. குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் நிகழ்வில் இணைந்தனர். இதில் பல சிறுவர்கள் சிறுமியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு நற்சான்றிதழ் மற்றும் பூச்செடிகள் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வென்றவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
அத்துடன் பசுமை சூழலியல் குறித்த விழிப்புணர்வும் பொதுமக்கள் நீர்நிலைகள் பராமரிப்பதில் இணைவது குறித்தும் போட்டியில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது. இறுதியாக அனைவருக்கும் காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.