
பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக் கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ‘அருளகம்’ இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளி மாநிலங்களிலிருந்து பாறு கழுகு தொடர்பான ஆராய்ச்சியிலும் களப்பணியிலும் அருளகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை அருளகத்தின் தலைவர் கார்த்திகா ராஜ்குமார் வரவேற்றார். அருளகத்தின் செயலர் பாரதிதாசன் நோக்க உரையாற்றினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அருளகம் சார்பாக ‘தமிழ்நாடு பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்திட்டம்- வரைவு அறிக்கை’ வெளியிடப்பட்டது.
இதனை ஓய்வு பெற்ற வனத் துறை அலுவலர் பத்ரசாமி வெளியிட ‘ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன் பெற்றுக்கொண்டார்.
பாறு கழுகுகள் பாதுகாப்புக்கென தேசிய அளவிலும் மாநில, மாவட்ட, மற்றும் பஞ்சாயத்து அளவிலும் எடுக்கவேண்டிய செயல்திட்டம் முன்மொழியப்பட்டுக் கலந்துகொண்ட அறிஞர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டுக் கருத்துகள் பெறப்பட்டன.
அதில் முதன்மைப்படுத்திச் செய்யவேண்டிய விசயம் பட்டியலிடப்பட்டு அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அருளகத்தின் செயலர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாறு கழுகுப் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பணிகளையும் அருளகம் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளையும் பாறு கழுகுப் பாதுகாப்புக்கென ஆசிய அளவிலான திட்டத்தின் மேலாளர் கிறிஸ்போடன் பாராட்டினார்.
குறிப்பாகக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறை விலக்கிக்கொண்டதைக் குறிப்பிட்டார். நிமுசிலாய்ட்சு மருந்தையும் இந்திய அளவில் உடனே அரசு தடைசெய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்வில் ஒருபகுதியாக மூன்று மாநிலங்களிலும் பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் பணிகளை அருளகத்தின் பணியாளர்கள் சர்மா, சாலினி மற்றும் சுந்தரி ஆகியோர் எடுத்துரைத்துனர். கர்நாடகாவில் மேற்கொண்டுவரும் பணியினைக் ‘காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பைச்’ சேர்ந்த ராஜ்குமார், கேரளாவில் மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து ‘ஹியூம்ஸ் மையத்தைச்’ சேர்ந்த விஸ்னுதாசு எடுத்துரைத்தனர்.