கோவை குனியமுத்துார் காளவாய் பகுதியில் உள்ள ஏ.ஐ.கே.எம்.சி.சி. (AIKMCC) மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் தலைமை வகித்தார். தேசிய தலைவர் அகமது குட்டி உண்ணிக்குளம், மாநில தலைவர் கானகத்து மீரான், மற்றும் மாநில செயலாளர் அப்துர் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் கூறியதாவது:
“முஸ்லிம் லீக் தொழிற்சங்கத்தை ரயில்வே யூனியனில் விரைவில் துவங்க உள்ளோம். இது இந்திய கூட்டணியை மேலும் பலப்படுத்தும். நாங்கள் டிசம்பர் மாதத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மதுரை, தஞ்சாவூர் போன்ற இடங்களில் மண்டல கூட்டங்களை நடத்த உள்ளோம். மே 1-ம் தேதி மாநில மாநாடு நடைபெறும். இதில் பல தேசிய மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்பார்கள்.“
அதானி விவகாரம், சிறை கைதிகள் விடுதலை, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை ஆகியவற்றிலும் தி.மு.க அரசின் நடவடிக்கைகள் மற்றும் அரசின் உதவிகளை அவர் பாராட்டினார். மேலும், மீதமுள்ள கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தொழிலாளர் நலனுக்கான புதிய திட்டங்கள் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.