நெல்லை மாவட்டத்தின் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம், பல்வேறு துறைகளின் அலுவலகங்களுடன், தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்ற ஒரு பரபரப்பான இடமாக விளங்குகிறது. பாதுகாப்பிற்காக சுழற்சி முறையில் போலீசாரும், வெடிகுண்டு தடுப்பு பிரிவும் செயல்படுகின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலை 1.20 மணிக்கு நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி செய்து, “நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்” என்று கூறிவிட்டு போனை துண்டித்தார்.
தகவலின் பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமன் உத்தரவின் பேரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் இரவு ரோந்து போலீசார் உடனடியாக அலுவலகத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் கட்டிடங்கள், அரசு வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து, மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணின் சிக்னல் மூலம் அந்த நபர் பேட்டை பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் செய்யது அப்துல் ரஹ்மான் (45) என்பவரே அந்த அழைப்பை செய்தது தெரியவந்தது.
அப்துல் ரஹ்மான் பேட்டை பகுதியில் கார் டிங்கரிங் மற்றும் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் அவரது மனைவி தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தைச் செய்திருந்தார், ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும், பொங்கல் பரிசு தொகையில் ரூ.1000 வழங்கப்படவில்லை என்பதால் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.
நேற்று மாலை டாஸ்மாக் கடையில் மது அருந்திய ரஹ்மான், மதுபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
விசாரணையின் பின்னர் செய்யது அப்துல் ரஹ்மானை பேட்டை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.