கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஈஷா எதிர்ப்பு கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பேராசியர் காமராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது, ஈஷா அறக்கட்டளையில் பணிபுரியும் டாக்டர் சரவணன் மூர்த்தி மீது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில், மேல்நடவடிக்கை எடுக்காததற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த வழக்கில் விசாரணையை விரிவுபடுத்தாததற்கு காரணம் என்னவென கேள்வி எழுப்பினர்.
குற்றச்சாட்டில் உள்ள மருத்துவர் கிராமப்புற பழங்குடியப் பகுதிகளுக்கு சென்று மொபைல் கிளினிக் மூலம் மாணவிகளை பரிசோதித்ததாகவும், அங்கு வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால் விரிவான விசாரணை தேவை என்பதும் குறிப்பிடப்பட்டது. பெண்கள் மருத்துவ பரிசோதனையில் பெண் மருத்துவர் அவசியமாக இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அவர்கள் மீள உணர்த்தினர்.
மேலும், பேராசியர் காமராசு, தனது இரண்டு மகள்களையும் ஈஷாவில் இதுவரை சந்திக்க முடியவில்லையெனவும், மகளை பார்க்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.