தென்காசி மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் கடுமையான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், குற்றால அருவிகளின் கரையோர பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ள சேதங்களை சரிசெய்த பின்னர், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால், பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால், கடந்த 16 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் தொடர்ந்த கோரிக்கையை அடுத்து, பழைய குற்றால அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு காரணமாக, வனத்துறை சுற்றுலா பயணிகளை முன்னெச்சரிக்கையுடன் குளிக்கச் செல்ல அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளத்தில் பாதுகாப்பு தடுப்புக் கம்பிகள் மற்றும் சாலையோர தடுப்புகள் போன்றவை சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.