
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நடத்தும், 46வது அனைத்து மின் வாரியங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கடந்த, 3ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், அசாம், ஒடிசா, டெல்லி, உத்தர பிரதேஷ், கர்நாடகாவில் இருந்து இரு அணிகள் என, 10 அணிகள் விளையாடியது.
இறுதி போட்டிக்கு முன்னேறிய கர்நாடக மின் வாரிய அணியும், தமிழ்நாடு மின்வாரிய அணியும் நேற்று முன்தினம் மோதியன. இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக மின் வாரிய அணி, 20 ஓவர்களுக்கு, 9 விக்கெட் இழப்புக்கு, 110 ரன்களை சேர்த்தது. அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு மின்வாரிய அணி, 20 ஓவர்களுக்கு, 8 விக்கெட் இழப்புக்கு, 106 ரன்களை சேர்த்து தோல்வி அடைந்தது. கர்நாடக அணியின் அணில்குமார் இரண்டு பவுன்ட்ரி, இரண்டு சிக்சர் உட்பட, 16 பந்துகளில், 27 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்றுபவர்களுக்கு இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பரிசளிப்பு விழா மற்றும் நிறைவு விழா நடைபெற்றது. இதில், கலெக்டர் கிராந்தி குமார் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்த கர்நாடகா, இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு, மூன்றாமிடம் பிடித்த ஒடிசா மற்றும் 4வது இடத்தை பிடித்த சத்தீஸ்கர் ஆகிய அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குனர் இந்திராணி, தலைமை பொறியாளர் குப்புராணி, விளையாட்டுத்துறை துணை இயக்குனர் ஜோஸ்னா, விளையாட்டு அலுவலர் சுபா உட்பட பலர் பங்கேற்றனர்.