புதுச்சேரி: மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மற்றும் பெரிய விமானங்கள் தரையிறங்கும்படி புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இயங்கி வந்த பாரதி, சுதேசி, ஏஎஃப்டி போன்ற பழமையான பஞ்சாலைகள் நஷ்டத்தில் செயல்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன. பஞ்சாலைகள் இருந்த இடத்தில் பொழுதுபோக்கு மையங்களை உருவாக்கவும், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கும் நீண்ட காலமாகவே அரசின் விருப்பம் உள்ளது.
இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், இன்று பஞ்சாலைகள் மற்றும் புதுச்சேரி விமான நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பெரிய விமானங்கள் தரையிறங்க ஏற்றவாறு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் இடத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், நகரத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிகளை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பதற்கும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், சந்திப்பின் போது எந்தவித ஆலோசனையும் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
Leave a Reply