
புதுச்சேரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசினார். திராவிடம் குறித்து பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பெரியார் குறித்து பேசுவதை எதிர்த்து வரும் திமுகவினர், அதற்கான ஆதாரங்களை தமக்குள் வைத்துக்கொண்டு கேள்வி எழுப்புவது நியாயமா என்று சீமான் கேள்வி எழுப்பினார். க.ப. அரவாணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இதுகுறித்து எழுதியுள்ளதாகவும், தமக்கான ஆதாரங்களை மறைத்து வைக்கும்போது, தங்களுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எந்த அளவில் நியாயம் என்று அவர் விளக்கமளித்தார்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை எதிரிகள் என்று கூறும் கருத்தை விமர்சித்த சீமான், தமிழர்கள் எந்த இனத்திற்கும் எதிரி அல்ல என்றும், உலக மொழிகளின் கலை, இலக்கிய, பண்பாடுகளை தாய்மொழி தான் அடையாளப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
பெரியார் பேசிய கருத்துகளை விமர்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சீமான், பெண்களைப் பற்றி பெரியார் பேசிய கருத்துகளை தான் எதிர்க்கிறேன் என்றும், 2008 வரை திருட்டுக் கூட்டத்தில் இருந்ததாகவும், தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்த பிறகு தான் கொள்கைகளை மாற்றியதாகவும் தெரிவித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறும் அரசுக்கு மாநில வளர்ச்சி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை என்று விமர்சித்த அவர், பெரியாருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், டங்க்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏன் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
சீமான் மீது நடத்தப்படும் போராட்டங்களைப் பற்றி பேசுகையில், எதிர்ப்பாளர்கள் எறிகின்ற செருப்பு ஏழு அல்லது எட்டு அளவுக்கு இருக்க வேண்டும் என்றும், நாட்டுக்கோழி முட்டையை வீச வேண்டும் என்றும் விமர்சித்தார். திராவிடம் குறித்துப் பேசுவதை நிறுத்தும் வரை பெரியார் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்று சீமான் உறுதியாக கூறினார்.