புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புயல் சின்னம் மற்றும் வானிலை நிலை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து, “ஃபெங்கல்” என்ற பெயரிடப்பட்ட புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென்தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.