திருவண்ணாமை மாவட்டத்தில் பா.ம.க சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு இன்று (21-12-24) நடைபெற்றது. உழவர்களின் பிரச்சனைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் முதலில் அன்புமணி ராமதாஸ் பேசினார். பின்னர் பா.ம.க நிறுவனரும் முன்னாள் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர்,
“நான் அடிப்படையில் ஒரு விவசாயி. திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இஸ்ரேல் மாடல் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம். 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை நட்ட நாடாக இஸ்ரேல் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகத்தில் வறட்சியாலும் வெள்ளத்தாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசும் இஸ்ரேல் மாடலை பின்பற்ற வேண்டும்” என குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகளின் பொருளாதார நிலை உயரவேண்டும் என்றும், தமிழகத்தில் வறட்சி மற்றும் ஆற்று மணல் கடத்தலால் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதில் பங்கேற்ற பா.ம.க தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு விவசாய சிக்கல்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அரசை கேட்டுக்கொண்டனர்.