திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் மறுமலர்ச்சி திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி எம்பி துரை வைகோ கலந்து கொண்டு, மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது சரியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. யார் தகவலை வெளியிட்டார் என்பதும் விரைவில் தெரிந்து கொள்ளப்படும்.”
மேலும், அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கேள்விப்பட்டதாகவும், ஆனால் அதற்கான முழு விவரங்கள் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “அவர் சாட்டையில் அடித்துக் கொண்ட விவகாரம் எதிர்க்கட்சியாக செயல்படுவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்டது என்று கருதுகிறேன். இது அண்ணாமலை மேற்கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை,” என துரை வைகோ தனது கருத்துகளை தெரிவித்தார்.