உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. இந்திய மருத்துவர்கள் சங்க பொள்ளாச்சி கிளை, ரோட்டரி கிளப் மற்றும் ஜே.கே.பி. மெடிக்கல் சென்டர் ஆகியன இணைந்து இப்பேரணியை நடத்தின.
மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் பேரணியை இந்திய மருத்துவர்கள் சங்க நிர்வாகி டாக்டர் ராமகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் சிவனடியான் உள்ளிட்டோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணி ரவுண்டானா அருகே நிறைவு பெற்றது.
பேரணி குறித்து டாக்டர் பெரியசாமி கூறுகையில், 25 ஆவது உலக இதய தினத்தை முன்னிட்டு மாரடைப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உலக நாடுகளில் இந்தியாவில் உள்ளவர்களுக்கு தான் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. அதாவது இந்தியாவில் 10 வினாடிகளுக்கு ஒருவருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. இதிலிருந்து மீள நாள்தோறும் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு என சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
Leave a Reply