கேரளாவின் பல பகுதிகளில் கனமழை நீடித்து வருவதால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் புதன்கிழமை, மற்றும் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கேரளத்திற்கு அருகே உள்ள அரபிக்கடலில் பரந்து விரிந்த லட்சத்தீவு பகுதியில் புதன்கிழமை அதீத கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலச்சரிவுக்கு காரணமான கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியது என்று கேரள அரசு குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மோகபத்ரா, “கேரளா உள்ளிட்ட மேற்கு கடலோரப் பகுதியில் ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆரஞ்சு எச்சரிக்கையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிவப்பு எச்சரிக்கைக்காக காத்திருக்க வேண்டாம்” என்றார்.
Leave a Reply