கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் சங்கனாசேரி முக்கு பகுதியில் கார் மற்றும் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தனம் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் தேவாநந்தன், ஸ்ரீதீப் வல்சன், ஆயுஷ் ஷாஜி, முஹம்மது அப்துல் ஜாஃபர் மற்றும் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் உட்பட 11 பேர், நேற்று இரவு ஒரு காரில் அதிவேகமாக சென்றனர்.
இன்று இரவு 9 மணியளவில் சங்கனாசேரி முக்கு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்துடன் மோதியது. மோதிய அதிர்ச்சியில் கார் முழுமையாக நொறுங்கி, அதில் இருந்த 5 மாணவர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மோதி நொறுங்கிய கார் 8 பேருக்கான சிறிய கார் என்பதால், அதிக பயணிகள் ஏற்றத்தால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பேருந்தின் முன்பகுதி கண்ணாடி உடைந்ததுடன், 15 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர்களின் வயது 20-ஐ விட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
இந்த கோர விபத்து கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.