ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் 25 புலிகள் காணாமல் போனதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார். இது அதிக அளவிலான புலிகள் காணாமல் போனது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஜனவரி வரை 13 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கு காணாமல் போயிருப்பது ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் நியமித்துள்ளார். புலிகள் காணாமல் போனதற்கான காரணம் நிர்வாக அலட்சியமாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மே 17 முதல் செப்டம்பர் 30 வரை, காணாமல் போன 14 புலிகளை கண்டறிவதை பூங்கா நிர்வாகம் தனது முதன்மைச் செயல்பாடாகக் கொண்டுள்ளது.
இதனிடையே, புலிகள் கண்காணிப்பில் இருந்த குறைபாடுகளை சரிசெய்வதற்காக வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமிராக்களில் இவை பதிவாகாததைப் பற்றி அறிக்கை அளிக்குமாறு குழுவுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பவன் குமார் கூறியுள்ளார்.
மாநில வனத்துறை 24 கிராமங்களை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு, புலிகளின் அதிக எண்ணிக்கை அவற்றை கண்காணிக்க சிரமத்தை உருவாக்கியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.