துருக்கியில் ஒரு விடியோ கேம் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞன் கத்தியால் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஆகஸ்ட் 12, திங்கள்கிழமையில் வடமேற்கு துருக்கியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் நிகழ்ந்தது. மசூதியில் தொழுகை முடித்துவிட்டு, சிலர் அருகிலுள்ள ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர் கத்தியுடன் வந்து அங்கிருந்தவர்களைக் குத்தினார்.
தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறையினரைப் பார்த்துவுடன் இளைஞன் தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர்.
அரசு பத்திரிக்கை நிர்வாகம் தெரிவித்ததாவது, “ஆர்டா கே என்ற அந்த இளைஞன் கத்தி, கோடாரி, புல்லட் ப்ரூஃப் உடை மற்றும் சட்டையில் சிறிய கேமராவுடன் தாக்குதலை மேற்கொண்டார். ஆனால், அவர் கோடாரியை பயன்படுத்தவில்லை. மேலும், தாக்குதலை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். காயமடைந்த ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என கூறப்பட்டது.
இந்த இளைஞன் விடியோ கேம்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.