பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை கவியருவி வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்,வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆழியாறு கவியருவியில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். அருவியில் நீர்வரத்து கணிசமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் தொடர்ந்து கவியருவிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவில் இருப்பதால், சிறிது நேரம் மட்டுமே அவர்களால் அருவியில் குளித்து மகிழ முடிகிறது.மேலும் ஆழியாறு பூங்கா கவியருவி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.